நினைவே வழிபாடு - சமர்ப்பணம் - அழைப்பு

       நினைவே வழிபாடு; சமர்ப்பணத்தைவிட எளியது. அதனால் நினைவை நாள் முழுவதும் மேற்கொள்வதால், அது சமர்ப்பணத்தின் பலனை அளிக்கும்.
      போஸ்ட் ஆபீசுக்கு போக வேண்டும் என்றால் அன்னையை நினைத்துப் பிறகு போகிறோம். சும்மா உட்காந்திருக்கும்பொழுது அண்ணன் நினைவு வந்தால்,அன்னையை நினைத்துப் பிறகு அண்ணனை நினைக்கிறோம். இடைவிடாது ஒவ்வொரு எண்ணத்திற்கும், செயலுக்கும் முன்பாக அன்னையை நினைப்பதை "நினைவே வழிபாடு" என்கிறோம்.
      சமர்ப்பணம் என்பதைச் சும்மா இருக்கும்பொழுது செய்வதில்லை. ஒரு காரியத்தைச் செய்யும்முன் அதை ஆத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்து, பின்னர் அது விட்ட வழியே அக்காரியத்தைச் செய்வதை, சமர்ப்பணம் என்கிறோம்.
      அழைப்பு என்பதன் மூலம் அன்னையின் சக்தியை நம்முள் கொண்டு வருகிறோம். அந்தச் சக்தி நம் செயலை, நம் விருப்பப்படி, தீவிரமாகச் செய்ய உதவும்.
      ஆகவே நினைவு எப்பொழுதும் உள்ளது. அன்னையை நினைத்துவிட்டு நம் இஷ்டப்படி செயல்படுகிறோம். சமர்ப்பணம் என்பது, செயல்களுக்கு முன்னர் மட்டுமே எழுவது. சமர்ப்பணம் செய்தபின் அச்செயலை நம் இஷ்டப்படி செய்ய முடியாது. ஆத்மாவின் ஆணைப்படியேதான் செய்ய வேண்டும். சமர்ப்பணத்தில் நம் விருப்பத்தை (will) விட்டுக் கொடுக்கிறோம். அழைப்பின் மூலம் அன்னை சக்தி உள்ளே வருகிறது.
    - நினைவு (memory) என்பது மனத்தின் ஒரு பகுதி.
    - சமர்ப்பணத்தைச் செய்வது நினைவில்லை, மனத்தின் செயல் திறன் (will power).
    - அழைப்பதும் (will power) அது தான்.

ஆகவே நினைவு, அழைப்பு, சமர்ப்பணம் ஆகியவை இந்த அளவில் வேறுபட்டவையாகும்.

ஆதாரம்: அருளமுதம், ஸ்ரீ கர்மயோகி.

Comments